Close
Breaking News
Home » சிறப்பு கட்டுரைகள் » ஆண்டுகள் 25 ஆகியும் துடைக்கப்படாத துயரம் 25 ஆண்டுகளுக்கு முன்பு….

ஆண்டுகள் 25 ஆகியும் துடைக்கப்படாத துயரம் 25 ஆண்டுகளுக்கு முன்பு….

north muslimசரியாகச் சொல்வதானால் 1990ம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 25 முதல் 31ம் திகதி வரை….ஏழே நாட்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொத்து, சுகம், தொழில், வேலை, வீடு, வாசல் என அனைத்தையும் இழந்து உடுத்த உடையோடு சொந்த இருப்பிடங்களை, ஊர்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டு இன்றுவரையிலும் இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாத அவலம் 25 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நீடிக்கிறது.
1990 அக்டோபர் 25ம் திகதி மன்னாரில் தொடங்கி வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் முடிவடைந்த இந்த விரட்டியடிப்பு நிகழ்ச்சி இலங்கை அத்தி யாத்தில் மறைக்க முடியாத கரும்புள்ளி.
இலங்கையின் வட மாகாணத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள், தனித்தமிழ் ஈழத்திற்காக போராடுகிறோம் என்ற பெயரில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட விடுதலைப்புலிகளால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் இரண்டே மணி நேர அவகாசத்தில் விரட்டியடிக்கப்பட்டனர். அதாவது தமிழர்களை தமிழர்களே விரட்டியடித்த கொடூரம் அரங்கேறியது.
அப்படி விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் களிடமிருந்து பணம், நகை என அனை த்தும் பறிக்கப்பட்டு ஒரே ஒரு பையில் துணிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு கடல் மார்க்கமாக மரக்கலங்களிலும், தரை மாக்கமாக வாகனங்களிலும் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
‘மனசாட்சியுள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தை காயப்படுத்திய அந்த கோர நிகழ்வே தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அழிவின் தொடக்கம்’ என செ. குணராசா தனது ‘மரணத்தின் தேசம்’ என்ற நாவ லில் பதிவு செய்தது இங்கு நினைவு கூரத்தக்கது.
வடபுலத்திலிருந்து விரட்டப்பட்ட தமிழ் பேசும் முஸ்லிம்கள் தென் இலங்கையின் புத்தளம், அனுராதபுரம், குருணாகல், பானந்துறை, நீர்கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது, அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர்.
2009 மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இலங்கை இறுதிப் போரையடுத்து வட மாகாணத்தில் அமைதி நிலை தோன்றியுள்ள போதிலும் அகதிகளாக வாழும் இந்த முஸ்லிம்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியவில்லை.
தமிழர்களின் விரோதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ அதிபராக இருந்தபோது, இந்த மீள்குடியேற்றத்துக்கு எந்த ஆர்வமும், அக்கறையும் காட்டவில்லை என்பதை கூட பொறுத்துக்கொள்ள முடியும்.
ஆனால், வட மாகாணத்தில் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அமைந்ததற்கு பிறகும்கூட இதற்கு ஒரு அக்கறையும் காட்டப்படவில்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் சுமார் 5 சதவீத முஸ்லிம்கள் மீள்குடியேற முயற்சித்த போது, தமிழ் அமைப்புகள் அதற்கு எதிராகவே செயல்பட்டன என்பதே இலங்கை முஸ்லிம்களின் இன்றைய வேதனை.
இலங்கை வடபுலத்திலிருந்து முஸ்லிம் கள் விரட்டப்பட்ட 25ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு மவ்லவி ரிஸ்வி முப்தி தலைமையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஏற்பாடு செய்து வருகிறது.
இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு சேர இணைத்து, இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மனு அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மாநாட்டில், இலங்கை அமைச்சர்கள் ரவூஃப் ஹக்கீம், ரிஸாத் பதியுத்தீன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் வெளிவந்துள்ள ஒரு நூல் 25 ஆண்டுகளுக்கு முந்தைய வெளியேற்ற சம்பவங்களையும், இன்றைய நிகழ்வுகளையும் தத்ஷரூபமாக படம் பிடித்துக் காட்டி கண்ணீரை வரவழைத்துள்ளது.
‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ என்ற இந்த நூலை எழுதியிருப்பவர் சுஐப் எம்.காஸிம் என்பவர் ஆவார். 1990 அக்டோபரில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டவர்களில் இவரும் ஒருவர். அப்போது அவருக்கு வயது 17. இவரது தந்தை வி.எம்.காஸிம் தலை சிறந்த மரபுக் கவிஞர். இவர்களின் பிறப்பிடம் மன்னார் – விடத்தல்தீவு.
தமது தந்தை, தாய் 14 வயது சகோதரி, தமக்கு கல்வி கற்றுத் தந்த கல்விச்சாலை அதிபர் என அனைவருடனும் உடுத்த துணிகளோடு வெளியேறிய இவர்கள் புத்தளம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
அங்கிருந்தபடியே படித்து மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பொறியாளராக பட்டம் பெற்றும், தன்னோடு புலம்பெயர்ந்த அகதிகளின் அவலம் உலகிற்கு தெரிய வேண்டும், அவர்களுக்கு சொந்த இருப்பிடம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பத்திரிகையாளராகி தினகரன் வார இதழில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி சட்டத்தரணி.
‘எனது புதல்வி சிங்கள வழியில் கல்வி பயில்கிறார், நாங்கள் சொந்த ஊரில் இருந்திருந்தால் தமிழ் வழியில் தானே கல்வி கற்றிருப்போம், இந்த பாவத்திற்கு விடுதலைப்புலிகள் தானே காரணம்’ என்கிறார் சுஐப் எம்.காஸிம்.
கொழும்பில் தபால் தலைமையக கேட்போர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்நூல் வெளியீட்டு விழாவில் இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேர்மன் பiர் ஷேக் தாவூத் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.
‘கண்ணீரும் கம்பலையுமாக காலம் தள்ளும் ஒரு சமூகக் குழுமம் தமது பிறந்தகத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட துயர வரலாற்றை உணர்ச்சிபூர்வமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல்.
வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் புலிகளின் இறுதித் தருணத்தில் வெறும் துயர் நிகழ்வாகவே சுருக்கப்பட்டது. ஆனால் அந்தத் துயரத்தின் அடர்த்தியை, அழுத்தத்தை, வருத்தங்களை, வலியை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. தமது தாயகத்திலிருந்து வேரோடு பிடுங்கி வீசப்பட்ட ஒரு சமூகத்தின் அவலங்களை இந்நூல் படம் பிடித்து பேசுகிறது’ என பதிவு செய்கின்றனர் புலம் பெயர்ந்தோர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஸாத் பதியுதீன் இலங்கை மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது, வடபுலத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களை மீள்குடியேற்றம் செய்ய முயற்சிகள் பல மேற்கொண்டார்.
அரசியல் காரணங்களுக்காக அவரது இலாகா மாற்றப்பட்டு விட்டது. தற்போது நடைபெற்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசு அமைத்துள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த தமிழரான டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்ற கேபினட் அமைச்சராகவும், அதிபர் மைத்ரி சிறிசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ் அந்த துறையின் இணை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றனர். இந்த கால கட்டத்திலாவது விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற முயற்சிக்கப்படுமா என்பதே அகதிகளாக வாழும் முஸ்லிம்களின் ஏக்கம்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு இலங்கை போர் குற்றம் தொடர்பாக சொல்கிறதே தவிர, விரட்டப்பட்டோரின் கதி பற்றி வாய் திறக்கவில்லையே என குமுறுகின்றனர் இலங்கை முஸ்லிம்கள்.
ஐ.நா சபையின் அமைப்புகள் கூட 1990ல் விரட்டப்பட்டவர்களை ‘பழைய அகதிகள்’ என்றும், இறுதிக்கட்ட போரில் புலம் பெயர்ந்தவர்களை ‘புதிய அகதிகள்’ என்றும் பிரித்து புதிய அகதிகளுக்கு காட்டும் சலுகை எதுவொன்றையும் கூட பழைய அகதிகளுக்கு தருவதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுகின்ற இலங்கை வட மாகாண சபை, விரட்டப்பட்ட முஸ்லிம்கள் குறித்து வாய் திறக்க மறுப்பதேன்? என்கின்ற அவர்களின் கேள்வி முற்றிலும் நியாயமானதே!
தமிழ்நாட்டிலும், தமிழ் தேசிய அமைப்புகள் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் குறித்து மௌனம் சாதிக்கின்றன என்பதே உண்மை. தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் பல தங்களை அரசியல் அரங்கில் நிலை நாட்டிக்கொள்வதற்காக இலங்கை இறுதிக் கட்ட போர் பிரச்சினையை கையிலெடுத்து போராடுகின்ற போதும், இலங்கை முஸ்லிம் அகதிகள் குறித்து பேச மறுக்கின்றன.
இலங்கை முஸ்லிம் அகதிகள் குறித்து பேசும் ஒரே அரசியல் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே. அதன் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் அவர்கள்தான் விரட்டப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் சொந்த இடங்களில் மீண்டும் மறுவாழ்வு வாழ முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடர்ந்து முழங்கி வருகிறார்.
வடபுல முஸ்லிம்கள் விரட்டப்பட்டு 25 ஆண்டுகளாகியுள்ள இந்த சமயத்தில் தமிழகம் வருகை தந்த இலங்கை அமைச்சர் மாண்புமிகு ரவூஃப் ஹக்கீம் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் சந்தித்தபோது கூட இலங்கை முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய கவலையையே பகிர்ந்து கொண்டனர்.
25 ஆண்டுகளாக சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் இலங்கை முஸ்லிம்களின் அழுகுரல் விழ வேண்டியவர்களின் காதுகளில் விழுமா? அவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா?
காயல் மகபூப் செய்தி ஆசிரியர்
மணிச்சுடர் நாளிதழ், சென்னை
இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg