Close
Breaking News
Home » சிறப்பு கட்டுரைகள் » பி.ஜெ வராமையினால் வளரும் பிணக்குகள்

பி.ஜெ வராமையினால் வளரும் பிணக்குகள்

 

P_Jainulabdeenதென் இந்திய மார்க்க அறிஞர் பி.ஜெயினுலாப்தீன் இலங்கை வரவுள்ளார் என்ற செய்தியினை அறிந்த இலங்கை மக்கள் அதனை பல கோணங்களில் அணுகி இருந்ததனை அவதானிக்க முடிந்தது.இந்த பி.ஜே தமிழ் நாடு தௌஹீத் ஜமாத்தின் ஸ்தாபகத் தலைவர் ஆவார்.இலங்கையில் இயங்கும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தும் இவரின் கொள்கையினை ஏற்கும் ஒரு அமைப்பாகும்.இஸ்லாம் என்ற சாயலில் ஏதோ செய்து கொண்டிருந்த மக்கள் மத்தியில் இவர் முன் வைத்த இஸ்லாமிய கருத்துக்கள் பல ஆணித்தரமான நிறுவல்களுடன் இருந்தும் அதனை  ஏற்கும் மனோ நிலையில் அன்றைய முஸ்லிம்கள் இருக்கவில்லை.காலப்போக்கில் இவரது ஆய்வுகளில் பற்றி மார்க்க அறிஞர்களிடையே முரண்பாடுகள் வலுத்திருந்தன.எனினும்,இவர் ஒரு சிறந்த ஆய்வாளர்,இஸ்லாமிய அறிஞர்,எழுத்தாளர்,பேச்சாளர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பி.ஜெயின் கருத்துக்கள் சில இஸ்லாமியர்கள் இது தான் இஸ்லாம் என  தங்களது மனதில் உயர்வாக நினைத்திருப்பவற்றை,இது இஸ்லாம் அல்ல எனக் கூறும்.சிலதை சிலர் ஏற்கின்றனர்.சிலர் சிலவற்றை மறுக்கின்றனர்.ஒரு கருத்தினை ஏற்பதும் ஏற்காது விடுவது ஒரு மனிதனுக்குள்ள சுதந்திரமாகும்.அது போன்றே தான் நினைக்கும் கருத்தினை வெளியிடுவதும் ஒரு மனிதனுக்குள்ள சுதந்திரமாகும்.அவர்களின் உளத் தூய்மையினைப் பொறுத்து அவர்களுக்கான கூலிகளை மறுமையில் பெற்றுக் கொள்வார்கள்.இவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பலரிடையே சர்ச்சையாகவே உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.ஹதீத்களை தெளிவாக விளங்காமை,போலி ஹதீத்களின் உள் நுழைவு போன்ற காரணிகள் சில விடயங்களில் மாற்றுக் கருத்திற்கு இடமற்ற தீர்வினைப் பெறுவதை சவாலுக்குட்படுத்துகிறது.இது போன்ற விடயங்களில் இது தான் இஸ்லாம் இதைத் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என யாரும் யாரையும் திணிக்க முடியாது.ஒரு குறித்த சர்ச்சைக்குரிய விடயத்தினை ஒருவர் மீது பின்பற்றத் திணிப்பது இஸ்லாமிய வழி காட்டலுமல்ல.அவ்வாறான விடயங்களில் இது தான் சரி என அடித்துக் கூற இங்கே யாரும் நபியுமல்ல.

இன்று இஸ்லாத்தை தெளிவாக தானாக ஆராய்ந்து படித்துணர அறபு மொழி அறிவின்மை போன்ற காரணிகள் அதனை சவாலுக்குட்படுத்துகிறது.இதன் போது இஸ்லாத்தை நன்கு கற்ற இஸ்லாமிய அறிஞர்களின் வழி காட்டல்கள் மக்களுக்கு தேவைப்படுகிறது.ஆனால்,இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடையே நிலவும் கொள்கை முரண்பாடுகள் மக்களுக்கிடையிலான கொள்கை முரண்பாடுகளாக தோற்றம் பெற்றுள்ளன.ஒவ்வொரு மார்க்க அறிஞருக்குப் பின்னாலும் ஒவ்வொரு கூட்டம் காணப்படுகிறது.அவர் எக் கருத்தினைக் கூறினாலும் அது தான் இஸ்லாம் என தலை அசைப்பார்கள்.இது தான் இன்று பிரச்சனைகள் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணியாகும்.ஒரு கருத்தில் முரண்பாடு தோன்றும் போது பல அறிஞர்களின் கருத்துகளினை ஒப்பு நோக்கி அதில் சரியானது எது என தனது உள்ளம் சுட்டிக் காட்டுவதை ஏற்பதே சாதாரண மக்கள் தெளிவினைப் பெறுவதற்கான இலகு வழியாகும்.

அண்மைக் காலமாக பி.ஜே இலங்கை வருவதில் சில அரசியல் தலையீடுகள் காணப்பட்டன.மரணித்த நியாஸ் மௌலவி அவர்கள் மஹிந்த ராஜ பக்ஸவுடன் தான் வைத்திருந்த நெருக்கத்தினை பயன்படுத்தி பி.ஜே இலங்கை வருவதைத் தடை செய்திருந்தார்.கடந்த முறை பி.ஜே இலங்கை வந்த போது அடியாட்கள் நியமித்து மௌலவிமார்கள் சண்டியர்களாக மாறிய வரலாறுகளும் உண்டு.தற்போது பி.ஜே இலங்கை வருவதனைத் தடுக்க மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா,வேறு சில இஸ்லாமிய அமைப்புக்கள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமே தவிர கோழைத் தனமான செயற்பாடுகள் மூலம் எதிர் கொள்ள முனைவது இஸ்லாமிய சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.அதிலும் குறிப்பாக இவ் விடயத்திற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா துணை போய் இருப்பது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவில் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் சம உரிமை உள்ளது என அடிக்கடி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முக்கியஸ்தர்களால் சுட்டிக்காட்டப்படும்.ஆனால்,இவ் விடயத்திலிருந்து ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் மீது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வேறு கண் கொண்டு பார்ப்பதை விளங்கிக்கொள்ளம்.பி.ஜே இலங்கை வந்தால் பிரச்சனை தோன்றுமாம்.என்ன பிரச்சனை தோன்றப்போகிறது? பி.ஜே இலங்கை வருவதை எந்த பேரின அமைப்புக்களும் தங்களுக்கு எதிரான ஒரு பெரிய விடயமாக தூக்கிப் பிடிக்கவில்லை.தூக்கிப் பிடித்தவர்கள் அனைவரும் பி.ஜெயின்  கொள்கையில் முரண்பட்டு நிற்கும் முஸ்லிம்களே! பி.ஜேயின்  வருகையினால் முரண்பாடு தோன்றக் கூடிய ஒரு வழி என்றால் அவர்களின் கொள்கை பிடிக்காதவர்களுக்கும் அவர் சார்பு அணியினருக்கும் இடையில் முறுகல்கள் தோன்றலாம்.இவ் இடத்தில் ஜம்மியத்துல் உலமா மக்களுக்கு  தெளிவான வழி காட்டல்களினை  வழங்கி இருக்க வேண்டுமே தவிர பி.ஜெயின் வருகைக்கு எதிராக கோசம் எழுப்புவதில் எதுவித நியாயமுமில்லை.பிரச்சனை வரும் என்று பார்த்தால் அவர் தனது கொள்கையினை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்ப்பது? நபியவர்கள் தன்னை எதிர்ப்பார்கள் என ஒதுங்கி இருந்திருந்தால் இஸ்லாத்தினை மக்கள் மத்தியில் முன் வைத்திருக்க முடிந்திருக்குமா? அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் இவ்வாறான செயற்பாடுகளே ஜம்மியதுல் உலமா மீது முஸ்லிம்கள் கொண்டிருக்கும் நன் மதிப்பினை இல்லாமால் செய்கிறது.

இஸ்லாமியப் போர்வையில் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையினை நேரடியாக மறுக்கக் கூடியவர்கள் இலங்கை வந்த போது வாய் மூடி மௌனியாக இருந்த அமைப்புக்கள் பி.ஜெயின் வருகையின் போது வாலைக் கிளப்பிக் கொண்டு குதித்துத் திரிகின்றனர்.இது அவரின் கொள்கைக்கு முன் தங்கள் கொள்கைகள் செல்லாக் காசாக மாறி விடும் என்ற அச்சத்தின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டி உள்ளது.பி.ஜே கொள்கை முரண்பட்ட கருத்துக்களினை மாத்திரம் கூறுபவர் அல்ல.பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்தினையும் தெளிவாக மக்களிடம் முன் வைக்கக் கூடிய ஒரு பேச்சாளர்.அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அவருடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டு கொள்கை முரண்பாடு விடயங்களினை இந் நிகழ்வில் தவிர்க்கக் கூறி இருக்கலாம்.மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படும் எனக் கருதி இருந்தால் அவ்வாறான பேச்சுக்களினைத் தவிர்க்க அறிவுறுத்தி இருக்கலாம்.இவ் விடயம் பற்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்துடன் பேசக் கூட நேரம் வழங்காது இறுதில் தடுப்பதற்கு துணை போய் இருந்ததை ஒரு போதும் ஏற்க முடியாது.இவ் விடயம் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் முறையான விதத்தில் தங்களது இந் நிகழ்வை நடாத்த அணுகி இருப்பதனையும் சுட்டிக் காட்டுகிறது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மக்களுக்கு பகிரங்கமாக விளக்கமளிக்க வேண்டும்.

இந்த நிகழ்வு சிங்கள மொழி மூல குர்ஆன் மொழி பெயர்ப்பு வெளியீடு என்பதால் பேரினத்தினைச் சேர்ந்த மக்களினை நோக்கிய முஸ்லிம்களின் ஒரு குறிவைப்பாக பேரின மக்கிடையே சித்தரிக்கவும் வாய்ப்பு உள்ளது.இந் நிகழ்விற்கு பேரினத்தினைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டுள்ளதால் இந்த தோற்றம் மறைக்கப்படும்.இந் நிகழ்வில் இலங்கையில் துவேச கருத்துக்களினை தூபமிட்டவர்களில் ஒருவரான சம்பிக்க ரணவக்க கலந்து கொள்வதை வைத்து சில விசமப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இந் நிகழ்வில் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் கலந்து கொள்வதானது இந் நிகழ்விற்கு பேரின வாதிகளின் சிறு பார்வை கூட முஸ்லிம்களின் மீது எழாமல் தடுக்க சிறந்த ஒரு வழியாகும்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கும் தௌஹீத் ஜமாதிற்கும் இடையில் உள்ள பகை வரலாற்றுப் பகையாக உருவெடுத்துள்ளது.மஹிந்த அரசு காலத்தில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அதனை ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் எதிர்த்திருந்தது.இக் காலப்பகுதியில் அசாத் சாலிக்கும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் வலுத்திருந்தன.அரசியல் பிளவுகளால் கருக் கொண்ட இப் பிரச்சனை காலப் போக்கில் இரு அமைப்புக்களுக்குமிடையிலான முரண்பாடுகளாக உருப்பெற்றுள்ளது.ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்திற்கு எதிரான பொது பல சேனா அமைப்பின் மத நிந்தனை வழக்கில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்திற்கு எதிராக அசாத் சாலி தனது சட்டத்தரணியையும் அனுப்பி இருந்ததாகவும் அறிய முடிகிறது.இவ் விடயத்தில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் தோற்கும் போது பிரச்சனை அவர்களுக்கு மாத்திரம் வராது.அதன் விளைவுகளை ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களும் அனுபவிக்க வேண்டிய நிலை வரும் என்பதை அசாத் சாலி அறிய வேண்டும்.

தற்போது அசாத் சாலி இஸ்லாமிய விடயங்களில் தலையிடும் அளவு தூய்மையான நிலையில் இல்லை.அவரின் அண்மைக் கால செயற்பாடுகள் அந்நிய மதத்தினரிடையே சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துள்ளது.அவர் கடைப்பிடிக்கும் இஸ்லாமிய கொள்கையும் தூய்மையானதாகவும் இல்லை.அவர் பின்பற்றும் இஸ்லாமியக் கொள்கையினை விளக்கினால் சிறு பிள்ளையும் கல்லெடுத்து அவருக்கு வீசலாம்.அந்தளவு பாரதூரமான அகீதா முரண்பாட்டுக் கொள்கையினை கடைபிடிக்கும் ஒருவர்.அசாத் சாலி இஸ்லாத்தினைக் கூறிக் கொண்டு இவ் விடயத்தினை தடுக்க எந்த விதத்திலும் பொருத்தமற்றவர்.இவர் தனது அண்மைக் காலப் பெண் பிரச்சனையினை இஸ்லாமிய அடிப்படையில் நியாயப்படுத்தி தனக்குத் தானே பத்வாவினை  வழங்கி கொண்டு செயற்படுகிறார்.இவரினால் தனக்கான பத்வாவினை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் பகிரங்கமாக கோர முடியுமா? ஒரு முஸ்லிம் நான்கு திருமணங்கள் செய்ய முடியும் என இஸ்லாமிய பலதார மனத்தினை தனது செயலுக்கான நிறுவலாக குறிப்பிட்டிருந்தார்.இவ் விடயம் அந்நிய மதத்தினரிடையே பலதார மணம் பற்றிய தப்பபிப்பிராயத்திற்கு வித்திட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.இவர் அக் குறித்த பெண்ணை எப்போது திருமணம் செய்தார்? என்ற வினாவினை எழுப்பினாலே இவரின் நிறுவல் செல்லாக் காசாக மாறிவிடும்.இவ் விடயத்தினை இவ் இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.

மஹிந்த ஓரிடத்தில் குறைந்தது ஐயாயிரம் மக்களினை ஒன்று கூட்டிக் காட்டினால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வேன் என சவாலிட்டு சிங்கள மக்களினை மஹிந்த பின்னால் அணி திரளச் செய்ய இந்த அசாத் சாலியியும் ஒரு காரணமாகும்.மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார் தனது அறிக்கை ஒன்றில் கடந்த மாகாண சபைத் தேர்தலில்  கண்டியில் ஐ.தே.க நான்கு ஆசனத்தினை இழக்க அசாத் சாலியின் பேச்சுக்கள் சிங்கள வாக்குகளினைத் தடுத்தமையினையே பிரதான காரணமாக குறிப்பிட்டிருந்தார்.முதலில் இவர் தனது பேச்சுக்களினை கட்டுப்படுத்த வேண்டும்.இப்படியான ஒருவர் இன்னுமொரு அமைப்பினை விமர்சிக்க தகுதியற்றவர்.இவர் இது வரை காலப்பகுதியில் சாதித்தித்தது தான் என்ன? அறிக்கைகள் மாத்திரம் விட்டு அரசியல் செய்கிறார்.அளுத்கமை கலவரத்துடன் தொடர்புடையவர்களினை கைது செய்யும் போராட்டத்தினை ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அறிவித்த போது மஹிந்த அரசு கதி கலங்கி குறித்த அமைப்புடன் சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கி இருந்தது.இவ்வாறு மஹிந்த அரசினை அடிபணியச் செய்த  ஒரு சந்தர்ப்பத்தினை அசாத் சாலியினால் சுட்டிக் காட்ட முடியுமா? இவரது கருத்துக்கள்,செயல்களினை அவதானிக்கும் குறித்த விமர்சனவாளர் அக் குறித்த விடயத்தில் படிப்பினை பெறுவதற்கு மாற்றமாக அவர் அக் கருத்தினை முன் வைக்கும் முறையினால் அக் குறித்த குற்றத்தினை இன்னும் இன்னும் அதிகமாக செய்ய உளவியல் ரீதியாக தூண்டப்படுவார்கள்.இப்படியான செயல்களில் ஒன்றாகவே இதனையும் பார்க்க வேண்டி உள்ளது.

இவரது கொள்கையில் பலரிற்கு உடன்பாடில்லை என்றே வைத்துக் கொள்வோம்.அதனை ஏன் தடுக்க வேண்டும்? ஒரு சிங்கள மதப் போதகர் இலங்கை வருகிறார் என்றால் முஸ்லிம்களினால் தடுக்க முடியுமா? அந்நிய மதத்தவர் போல நினைத்துக் கொண்டாவது அமைதியாக இருந்து கொள்ளலாமே? இதனைப் பார்க்கும் அந்நிய மதத்தவர்கள் என்ன நினைப்பார்கள்? இஸ்லாத்தில் சாதி வேறு பாடில்லை என மார் தட்டி கூறும் இஸ்லாமியர்கள் இயக்க வேறுபாடுகளால் பிரிந்து நிற்பது தான் இஸ்லாம் காட்டித் தந்த வரைமுறையா? பி.ஜெயின் இலங்கை வருகையினை ஒரு பொருட்டாக கணக்கெடுக்காமல் இருந்திருந்தால்,இந் நிகழ்வு இவ்வளவு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பினைப் பெற்றிருக்காதுஅவர்கள் கூட்டம் கூட்டி அவர்களாகவே கலைந்திருப்பார்கள்.ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் இந் நிகழ்வுக்கு அவ் அமைப்பின் எதிரிகள் இலவச விளம்பரம் செய்து கொடுத்துள்ளார்கள் என்பது மறை முக உண்மைகளில் ஒன்றாகும்.நையாண்டி திரைப்படத்தில் குறித்த இயக்குனருடன் தான் ஒரு ஒழுக்கமான இஸ்லாமியப் பெண் எனக் குறிப்பிட்டு நஸ்ரியா நாசிம் முரண்பட்ட போது அதனை விமர்சித்து அக் குறித்த திரைப்டத்தினை பார்க்க மக்களினை தூண்டியது போன்றே இவ் விடயமும் நிகழ்ந்துள்ளது.

இவர்களினை குழப்பவாதிகள் என நாம் போர்க் கொடி தூக்கும் போது அது பேரின மக்கள் மத்தியில் எது வித சந்தேகங்களும் இன்றி ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கருத்தாக மாறும்.திடல் தொழுகை போன்ற சில விடயங்களில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் கொள்கைக்கு மக்கள் மத்தியில் அதீத வரவேற்புள்ளது.இது போன்ற நிகழ்வுகளினை சுட்டிக் காட்டி இலங்கையில் உள்ள அநேகமானவர்கள் குழப்பவாதிகள் என்றால்,அது யாரினை பாதிக்கப்போகிறது? அசாத் சாலி பி.ஜெயின் வருகையினை ஒரு பயங்கர வாதியின் வருகை போன்று சித்தரித்துள்ளார்.இலங்கையில் ஜிஹாத் அமைப்புக்களின் ஊடுருவல் உள்ளதா? என்ற சந்தேகம் நிலவும் இக் காலப்பகுதியில் இவ்வாறான பேச்சுக்கள் நாமே எம்மைக் காட்டிக் கொடுப்பது போன்றாகாதா? மேலும்,இந் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.அப்படியானால் இலங்கையில் குழப்பவாதிகளான பல்லாயிரம் முஸ்லிம்கள் உள்ளதாக முஸ்லிம்களே ஏற்கின்றனரா? பி.ஜெயிற்கு எதிரான போர்க்கொடி அந்நிய மக்களிடையே முஸ்லிம்களை முஸ்லிம்களே காட்டிக் கொடுப்பதற்கு ஈடாகும்.

பி.ஜெயின் இஸ்லாமியப் பிரச்சாரம் பலருக்கு இஸ்லாமிய அறிவைப் போதித்துள்ளது.பல மாற்று மத சகோதரர்கள் இவரின் போதனைகளினை செவியுற்று நாளாந்தம் இஸ்லாத்தினை ஏற்றும் வருகின்றனர்.சிங்கள மொழியிலான குர்ஆன் மொழி பெயர்ப்பு காலத்தின் தேவைகளில் ஒன்றாகும்.அந்நிய மதத்தவர்களின் சந்தேகங்களினை நிவர்திற்கும் வகையில் இக் குர்ஆன் மொழி பெயர்ப்பில் விளக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.இது மிகவும் அத்தியவசியமான ஒன்றாகும்.எனவே,இதனை எதிர்த்து போர்க் கொடி தூக்குவதற்கும் இஸ்லாத்திற்கு எதிராக போர்க் கொடி தூக்குவதற்குமிடையில் பாரிய வேறுபாடில்லை.வைக்கோல் பட்டறையில் உள்ள நாயைப் போன்று சிலர் தானும் செய்ய மாட்டார்கள் பிறரை செய்யவும் விட மாட்டார்கள்.

சில முஸ்லிம்கள் இஸ்லாமாக நினைத்துச் செய்வதும் பி.ஜே அணியினர் அதனை இஸ்லாமாக கருதாததுமான ஸியாரத் வழிபாடு போன்ற விடயங்கள் அவ் மொழி பெயர்ப்பில் இது இஸ்லாம் அல்ல என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.இது குறித்த அமைப்புக்களின் கொள்கையினை அந்நிய மதத்தவர்களின் முன்னிலையில் எள்ளி நகையாடும் ஒரு விடயமாகவும் நோக்கலாம்.இது இந் நிகழ்வை சிலர் தடுத்தமையிலுள்ள ஒரு நியாயமாக குறிப்பிடலாம்.பி.ஜே அணியினர் மாற்று மத சகோதரர்களுக்கான “இஸ்லாம் இனிய மார்க்கம்” போன்ற தலைப்பில் வினா விடை நிகழ்வுகளினை ஏற்பாடு செய்யும் போது இவ் விடயத்தினை அடிப்படையாக கொண்ட வினாக்களே அதிகம் கேட்கப்படும்.இதற்கு பதில் சிரமமான ஒன்றும் கூட.சில விடயங்கள் அவர்கள் பார்வையில் இஸ்லாத்தினை அவமதிக்கும் ஒன்றாகவும் நோக்கப்படுகிறது.இவ்வாறான விடயங்களினை இஸ்லாம் அல்ல என அவர்களுக்குப் புரிய வைத்து விட்டால் இவ் வினாக்களினை தவிர்க்கலாம்.இவ் விடயத்தினை இவ்வாறு நோக்கும் போது அதில் பிழை இருப்பதாகவும் தெரியவில்லை.

பி.ஜெயின் வருகையினைத் தடுத்தமையினால் யாரும் எதனையும் சாதித்து விட வில்லை என்பதே உண்மை.எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்துள்ளது.இன்னும் சொல்லப் போனால் பி.ஜே வராமையினால் அவரின் பயணச் செலவுகள் மீதம் என்றும் கூறலாம்.பி.ஜெயின் வருகையினைத் தடுத்தமையினால் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் மிகவும் கனத்த கோபத்துடன் உள்ளது.இவ் அமைப்பின் துணைச் செயலாளர் றஸ்மின் அவர்கள் நல்லாட்சி அரசு தங்களுக்கு அநீதி இழைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும்,இதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் கர்சித்துள்ளார்.ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தினைப் பொறுத்தமட்டில் நேரடியாக அதிரடி எக்சனில் களமிறங்குவது அதன் பண்பாகும்.அளுத்கமை கலவரத்திற்கு நீதி கேட்டு மஹிந்த அரசு காலத்திலேயே ஆர்பாட்டம் செய்யத் துணிந்தவர்கள்.நீதி கேட்டு ஆர்பாட்டங்களில் களமிறங்கினால்.அதனை எவ்வாறு எதிர் கொள்வது? அரசு எதிர்கொள்ள வேண்டும் என்பதை விட தடுப்பதற்கு பிரதானமானவர்கள் இதனை எதிர்கொள்ள முனைவதே பொருத்தமானது.இதனை முஸ்லிம்களே எதிர்கொள்ள துணிந்தால் நிலைமை என்னவாகும்? எலி அறுத்துவிடும் ஆனால் அதனால் தூக்கிச் செல்ல முடியாது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg