Close
Breaking News
Home » சிறப்பு கட்டுரைகள் » மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் 53 வது வருட நிறைவு ஒரு வரலாற்றுச் சாதனை

மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் 53 வது வருட நிறைவு ஒரு வரலாற்றுச் சாதனை

makola openage-எஸ்.அஷ்ரப்கான்

மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் 53 வது வருட நிறைவை முன்னிட்டு பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் கௌரவிப்பு விழாவும் 15.11.2015 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மணிக்கு கொழும்பு-10 மருதானை தெமடகொட வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஏ.எஸ்.எம். இல்யாஸ் பாபு தலைமையில் நடைபெற்றது.

குறித்த இந்நிகழ்விற்கு ஜாமிஆ நளீமிய்யா கலாபீட பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், விசேட பேச்சாளராக சிரேஷ்ட அறிவிப்பாளர் அஸ்ரப் சிஹாப்தீன் கலந்து சிறப்பித்தார்.

இவ்விழாவின் போது மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் ஆயுட் கால போசகரும், ஜாமிஆ நளிமிய்யா கலாபீடத்தின் ஸ்தாபகருமான காலஞ்சென்ற நளீம் ஹாஜியாருக்கு “காத்தமுல் அய்தாம்- அநாதைகளின் பாதுகாவலன்” எனும் பட்டம் வழங்கப்பட்டது. இதனை அன்னாரது குடும்பம் சார்பாக பேரர் அல்-ஹாஜ் இஸ்ரத் அலியிடம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரியில் இருந்து மௌலவிப் பட்டம் பெற்று வெளியேறிய நிலையத்தின் பழைய மாணவர்களும் இவ்விழாவின் போது கௌரவிக்கப்பட்டதுடன், மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் 53 வருட நிறைவை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் அல் யதாமா என்ற பத்திரிகையின் 23 வது இதழ் வெளியிடப்பட்டது. இதன் முதற்பிரதியை புத்தக பூங்கா புரவலர் ஹாஸிம் உமர் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதனை பணிப்பாளர் டாக்டர் சுக்ரி அவர்கள் வழங்கிவைத்தார். மாக்கோல முஸ்லிம் அநாதை நிலையத்தின் பழைய மாணவனும் உறுப்பினருமான அப்துஸ் ஸத்தார் தனது கலாநிதி பட்டத்தைப்பூர்தி செய்தமைக்காக பழைய மாணவர் சங்கத்தினால் பாராட்டி ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் பனிப்பாளர் டாக்டர் சுக்ரி அவர்களினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் ஹாஸிம் உமர், கொழும்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், சிரேஷ்ட அறிவிப்பாளர் அஸ்ரப் ஸிஹாப்தீன், ஐம்மியதுல் உலமா சபை பிரதித் செயலாளர் தாஸிம் மெளலவி உட்பட நூற்றுக்கணக்கான மாகொல முஸ்லிம் அநாதை நிலைய பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் இலங்கையின் நாலா புறங்களிலுமிருந்து வந்து கலந்துகொண்டனர்.

கம்பஹா மாவட்டத்தின் பியகம பிரதேசத்தில் கிரிபத்கொடயிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் 1962 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது. தற்போது இந்நிலையத்தின் 53 ஆவது ஆண்டு நிறைவு விழாவை அதன் பழைய மாணவர் சங்கம் சிறப்பாக கொண்டாடுகிறது.

இலங்கை வாழ் முஸ்லிம் அநாதைகளின் வாழ்விலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் உதயம் இன்று இலங்கையில் இருக்கின்ற பல்வேறு துறைகளைகளையும் சார்ந்த நற்பிரஜைகளை உருவாக்கிவிட்டுள்ளது என்பதை நிதர்சனமாக காணக்கூடியதாக உள்ளது.

1962 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி 30 அநாதை மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையம், ஆரம்ப கர்த்தாக்களின் அயராத முயற்சியினாலும், தூய்மையான பொதுநல உழைப்பினாலும் இன்று இந்நிலையம் ஆலவிருட்சமாக விருத்தி பெற்று வளர வழிகுத்திருக்கின்றது. இந்நிலையத்தை நாடி வரும் அநாதைகளை தொடர்ந்தும் சிறப்பாக இஸ்லாமிய கட்டுக்கோப்புடன் வாழக்கூடிய சிறந்தவர்களாக அநாதைகள் என்ற பெயரையே மறந்து தன் சொந்தக்காலில் தலை நிமிர்ந்து வாழக்கூடியவர்களாக மாற்றிவருகின்றது.

ஆரம்பத்தில் 30 மாணவர்களைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் இன்று 1000 மாணவர்களை பராமரிக்கும் அளவிற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தினை ஸ்தாபிப்பதற்கு மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பை ஒரு முக்கிய ஸ்தாபகரின் தாயார் மாகொல எனும் சிங்கள கிராமத்தில் நன்கொடையாக வழங்கி உதவினார். பின்னர் தர்மகர்த்தாக்களின் அயராத முயற்சியினால் இரு மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் அப்போது கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிற்பாடும் பல்வேறு முயற்சிகளின் ஊடாக பல மாடிக்கட்டிடங்களை தன்னகத்தே கொண்டதாக தற்போது காட்சி தருகின்றது.

1978 ஆம் ஆண்டு நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட அரபு மத்ரஸாவில் கல்வி கற்ற சுமார் 300 பேர்கள் ஆலிம்களாகவும், ஹாபிழ்களாகவும், மௌலவிகளாகவும் வெளியேறியுள்ளனர். இங்கு போதிக்கப்படும் அரபு போதனைகளில் கல்வி கற்ற மாணவர்கள் உயர் கல்விக்காக எகிப்து, மதீனா, டுபாய் போன்ற வெளிநாட்டு அரபு பல்கலைக்கழகங்களுக்கும் செல்வதற்கு சகல ஏற்பாடுகளையும் இந்நிலையம் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. மேலும் இந்நிலையத்தின் சாதனைகளாக கல்வி கற்ற மாணவர்கள் பலர் ஆசிரியர்களாகவும், சிறந்த தொழிநுட்பவியலாளர்களாகவும், பொறியியலாளர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், மார்க்க அறிஞர்களாகவும், ஹாபிழ்களாகவும், ஆலிம்களாகவும், மேலும் பலர் அரச, தனியார் துறைகளிலும் அமைச்சுக்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள், தூதுவராலயங்கள் என்பவற்றிலும் சேவையாற்றி வருகின்றனர். இது இந்நிறுவனத்தின் 53 வருடகால சாதனைப்பட்டியலாகும்.

மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் கிளையான அல்- யதாமா பாடசாலை உளஹிட்டிவலயில் இயங்கி வருகிறது. அல்- யதாமா பாடசாலையின் அதிபராக இருந்த முன்னாள் அதிபர் எப். முஹம்மட் ஹனீபா அவர்களின் சிறப்பான வழிநடாத்தலால் இந்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டு புலமைப்பரிசில்களுக்கும் இந்நிலையத்தின் மாணவர்கள் செல்ல சிறந்த தகுதிகளையுடையவர்களாக மாணவர்களை தயார்படுத்த யதாமா பாடசாலை மூலம் சிறப்பாக வழிநடாத்தப்பட்டது. கல்வித்துறை மாத்திரமல்லாது வெளிக்கள செயற்பாடுகள், நிலையத்தின் பௌதீக வளம் போன்ற பல விடயங்களிலும் அன்றைய நிர்வாகம் சிறப்பாக செயற்பட்டு முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் சென்றமை விசேடமாக குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

அப்போதிருந்த நிலைய நிர்வாக சபையின் வேண்டுதலின் பெயரில் மாகொல முஸ்லிம் அநாதை நிலைய பழைய மாணவர் சங்கம் 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்றுவரை மிகவும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அநாதைகளின் வாழ்வில் ஒளியூட்டக்கூடியதாக இயங்கி வருகின்றது. தற்போதைய வளர்ச்சிப்பாதையில் இச்சங்கம் மேலும் பல நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. இவையனைத்தும் இஸ்லாமிய வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் பரஸ்பர புரிந்துணர்வுக்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையிலேயே இச்சங்கம் இயங்கி வருகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி அதனை மீண்டும் கட்டியெழுப்ப அயராது உழைக்கப்போவதாக இச்சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவராலும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இன்றைய காலகட்டத்தில் மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் போன்ற சமூக சேவைக்கான நிலையங்கள் சிறப்பாக செயற்பட்டு, சமூகத்தின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கின்றது. இவ்வாறான அமைப்புக்கள் புத்திசாதுரியமான செயற்பாடுகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்காக முன்னின்று உழைப்பதற்கு முஸ்லிம் தனவந்தர்கள், அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள், பொது நல அமைப்புக்கள் இணைந்து இவ்வமைப்பிற்கு உதவ முன்வர வேண்டும். அதனுாடாக முஸ்லிம் சமூகத்தில் அநாதைகள் என்ற நாமம் கொஞ்சமேனும் இல்லாதொழிக்கப்பட்டு ஒரு சிறந்த நற்பிரஜைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் தரப்பினர்களும் இணைந்து மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்திற்கும், அதன் பழைய மாணவர் சங்கத்திற்கும் பக்கபலமாக இருக்க முன்வர வேண்டும்.

-நன்றி விடிவெள்ளி

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg