Close
Breaking News
Home » இந்திய செய்திகள் » தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் : பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் : பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம்

jayaஅ.தி.மு.க. பொதுசெயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த செப்டம்பர் மாதம் 22, 25, 30 ஆகிய தேதிகளிலும் மற்றும் கடந்த மாதம் 2, 11, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் நான் எழுதியுள்ள கடிதங்களில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 86 மீனவர்களின் பரிதாபமான நிலைமை குறித்தும், அவர்களது படகுகள் இலங்கை அதிகாரிகள் வசம் இருப்பது குறித்தும் தெரிவித்துள்ளேன்.

மேலும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை அவர்களது படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும், நீண்டகாலமாக உள்ள இந்த வேதனை தரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை மத்திய அரசு காண்பதற்கான அவசியம் குறித்தும் நான் கோரிக்கை விடுத்திருந்தேன். இந்த விவகாரம் தொடர்பாக தமது கவலை குறித்த கடிதங்களை, தமிழக நாடாளுமன்ற குழுவினர், மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரை கடந்த 26-ந் தேதி சந்தித்து, அவரிடம் நேரில் கொடுத்துள்ளனர்.

எனது வேண்டுகோளைத் தொடர்ந்து, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 24-ந் தேதி அன்று, தமிழக அரசுக்கு தெரிவித்த தகவலில், இருநாட்டு சிறைகளிலும் உள்ள மீனவர்களை ஒரே நேரத்தில் விடுதலை செய்யும் திட்டத்திற்கு இலங்கை தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக சிறைகளில் உள்ள 2 இலங்கை மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டேன்.

எனினும், இலங்கை சிறைகளில் உள்ள 86 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாகவே, இருவேறு சம்பவங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 34 மீனவர்களும், அவர்களின் 7 படகுகளுடன் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டனர்.

தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு கேட்டபோது, நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் முடிந்தவுடன் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என உறுதியளிக்கப்பட்டது.

இலங்கைச் சிறைகளிலிருந்து விடுதலையாகி தாயகம் திரும்பும் தங்களின் சகோதரர்களை வரவேற்க தமிழக மீனவர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் தளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகையும் நேற்று (நேற்று முன்தினம்) இரவு இலங்கை கடற்படை பிடித்து தலைமன்னாருக்கு கொண்டு சென்றுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதற்கு அடிப்படை காரணமாக விளங்கும் கச்சத்தீவை தாரை வார்த்த, 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்ற தமிழகத்தின் உறுதியான நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன்.

இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மீன்பிடி படகுகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவை பலத்த சேதமடைந்து இருப்பதை ஏற்கனவே தங்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதியும், 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதியும் தங்களிடம் நேரடியாக வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள படி, ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆயிரத்து 520 கோடி ரூபாயும், பராமரிப்பு செலவுகளுக்காக ஆண்டுதோறும் தலா 10 கோடி ரூபாயும் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் நீங்கள் (பிரதமர்) நேரடியாக தலையிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இலங்கை வசமுள்ள படகுகளையும், அங்கு சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அடுத்த சில நாட்களில் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நீண்ட நாள் பிரச்சினையான இதற்கு, உடனடி தீர்வுகாண உயர்மட்ட அதிகாரிகள் அளவில் இதனை கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg